“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகளை கௌரவிக்கும் வகையில், சென்னை மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் ‘பேனா சின்னம்’ அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் என பலரும் கலந்துக்கொண்டார்கள். பேனா சின்னம் அமைப்பதற்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்தனர்.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய ‘நாம் தமிழர்‘ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
'கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப் பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிதான் அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப் பாருங்க... ஒருநாள் நான் வந்து உடைக்கலன்னா பாருங்க... யார் கேட்டா பேனா சின்னம்? ஏன், பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள். நினைவிடம் கட்டி உள்ளீர்களே... அங்கே வையுங்கள். கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. இதனால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' என சீமான் ஆவேசமாக பேசினார்.
இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர் .
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது,
“அவர் சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூ பறித்துக்கொண்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும் தான் இருக்கா, எல்லாருக்கும் இருக்கிறது”, என்று தெரிவித்துள்ளார்.