தேசிய அரசியலில் குதிக்கிறாரா கே.சி.ஆர்?!

 கே.சந்திரசேகர ராவ்
கே.சந்திரசேகர ராவ்
Published on

தேசிய அரசியல் களத்தில் குதிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தெலங்கான மாநில முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், இதற்காக இந்த மாத இறுதியில் மீண்டும் ஒருவார பயணமாக தில்லி செல்கிறார்.

ஏற்கனவே இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அவர் தில்லியில் முகாமிட்டிருந்தார். பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியின் தேசிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தேசிய அரசியலில் குதிக்கும் நோக்கில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி ஆகியோரையும் தில்லியில் சந்தித்துப் பேசினார்.

இந்த மாத கடைசி வாரத்தில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஒருவாரம் நடைபெறும் என்று முதல்வர் கே.சி.ஆர். முன்னதாக அறிவித்திருந்தார். இப்போது முதல்வர் தில்லி செல்ல திட்டமிட்டிருப்பதை அடுத்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஜனவரிக்கு ஒத்திப்போடப்படும் எனத் தெரிகிறது.

மேலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 5 நாள் பயணமாக தெலங்கானாவுக்கு வருகிறார். தில்லி செல்வதால் அந்த நேரத்தில் முதல்வர் இங்கு இருக்க மாட்டார் எனத் தெரிகிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தனது நடவடிக்கைகளை ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் விரிவுபடுத்த உள்ளது.

இதன் முதல் கட்டமாக இந்த மாநிலங்களில் கட்சியின் விவசாயிகள் பிரிவை ஏற்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளார்.

ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கட்சியை விரிவு படுத்த திட்டமிட்டுள்ள சந்திரசேகர ராவ், முதல் கட்டமாக அந்தந்த மாநிலங்களில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பலரும் பாரத் ராஷ்டிர சமிதியில் இணைந்து அரசியல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக்க் கூறப்படுகிறது.

தேசிய அரசியலில் குதிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் சந்திரசேகர ராவ் முறைப்படி அறிவித்த பின்னர் தேசிய அளவில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com