சி.ஐ.டி.யூ பிரச்சனையால் சாம்சங் நிறுவனம் தமிழகத்தைவிட்டு வெளியேறவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனத்தில் சுமார் 2000 பேர் வேலைப் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து தொடங்கப்பட்ட இந்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 1 மாதக்காலம் ஆகிவிட்டது.
சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், திரும்பாவிட்டால் பணி நீக்கம் மற்றும் சம்பளத்தை பிடித்தல் போன்றவை செய்யப்படும் என்றும் நிறுவனம் எச்சரித்தது. ஆனால், அதையும் மீறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க சொல்லி முதல்வர் கூறினார்.
ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அதில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு இல்லாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 14 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து அரசின் கோரிக்கைளை ஏற்று தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார். ஆனால் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
சிஐடியுவை பதிவு செய்வதைத் தவிர்த்து மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், தமிழக அரசு இதில் தலையிட வேண்டாம் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் , சாம்சங் நிறுவனம் சி.ஐ.டி.யூ பிரச்சனையின் காரணமாக தமிழகத்தை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2000 ஊழியர்களைக் கொண்ட சாம்சங் நிறுவனம் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உத்திரபிரதேச அரசும், ஆந்திரா அரசும் இந்த நிறுவனத்தை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத்தும் சாம்சங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.