‘மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம்?’ சந்திரபாபு நாயுடு!

‘மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம்?’
சந்திரபாபு நாயுடு!
Published on

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் மீண்டும் சேருவது குறித்து பரவலாக வதந்திகள் உலா வருகின்ற நிலையில் அதுபற்றி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

‘மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரும் எண்ணம் உள்ளதா?’ என்று செய்தி நிறுவனம் ஒன்று கேட்ட கேள்விக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவிடம், ‘அதுபற்றி பேசுவதற்கு இது தருணம் அல்ல. நேரம் வரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, ‘2047-ஓர் கண்ணோட்டம்’ ஆவணத்தை வெளியிட்டுப் பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். எனினும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.

‘2024ல் தேசிய அரசியலில் எனது பங்கு தெளிவாக இருக்கும். எனது முன்னுரிமை ஆந்திர மாநிலத்துக்குத்தான். ஆந்திர மாநிலத்தை மீண்டும் கட்டமைப்பதே எனது முக்கியப் பணியாக இருக்கும்’ என்றும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் கூறினார்.

அமராவதியை தலைநகராக்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இதுபற்றி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம்தான் கேட்க வேண்டும். அவர் இதுவரை இது தொடர்பாக அமைச்சரவைக்கூட்டத்தை நடத்தியது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே முதல்வர் என்ற முறையில் அவர் சரிவர செயல்படவில்லை. அமராவதியை தலைநகராக்குவதற்கான திட்டம் தயாராகவே உள்ளது’ என்றார்.

2014ம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திரப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. ஆந்திர மாநில மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஹைதராபாத், தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமாகிவிட்டது. ஆந்திர மாநிலத்துக்கு என புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். அதுவரை ஹைதராபாத் நகரமே இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி, ‘விசாகப்பட்டினம் தலைநகரமாக இருக்கும்’ என்று கூறினார். ஆனால், இதுபற்றி மாநில சட்டப்பேரவையில் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசு, வளர்ச்சி நோக்கில் மாநிலத்தில் 3 இடங்களில் தலைநகரை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com