தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் இடமாற்றமா?

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

‘தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை தற்போது மிக முக்கியமான பேசுபொருளாக மாறி இருக்கிறது. மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலகமாக புனித ஜார்ஜ் கோட்டை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் மிகவும் பழைமையான, தொல்லியல் துறையின் சான்றாக உள்ளது. இந்தக் கட்டடத்தின் இடம் ராணுவத்துக்கு சொந்தமானதாகவும், இந்திய தொல்லியல் துறை பராமரிப்பிலும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் காணப்படும் இட நெருக்கடி, பராமரிப்புப் பணி மேற்கொள்ள முடியாத சூழல் போன்ற காரணங்களால் தலைமைச் செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில், ‘தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், ‘தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 7 ஆயிரம் பணியாளர்கள் வரை இதில் பணியாற்றி வருகின்றனர். அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளதால், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைமைச் செயலகத்துக்கு வருகின்றனர். இதனால் போதிய இட வசதி இல்லாமல் தலைமைச் செயலகம் நெருக்கடியாகக் காணப்படுகிறது.

மேலும், சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் இடத்தில் 234 உறுப்பினர்கள் அமர்வதற்கான போதிய இடவசதி இல்லை. மேல் தளத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அவ்வப்போது கட்டுமானப் பணிகள், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதுதவிர, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு உகந்த கழிவறைகள் இல்லாத சூழல் தலைமைச் செயலகத்தில் பிரதான பிரச்னையாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி, மிக முக்கிய அலுவலகமான தலைமைச் செயலகத்துக்கு தீயணைப்புத் துறையின் பாதுகாப்புச் சான்று இல்லை. இதனால் தீ விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய சேதம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, 2010ம் ஆண்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சட்டமன்றம், 6 மாதம் பயன்பாட்டில் இருந்தது. பிறகு ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. எனவே, மீண்டும் தலைமைச் செயலகத்தை அங்கேயே மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தை மாற்றம் செய்வதற்கான தேவை குறித்து குறிப்பிட்டிருந்தார். மேலும், கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள 600 ஏக்கர் நிலத்தை அதற்குப் பயன்படுத்தலாம் என்றும் அல்லது சென்னை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதான வழக்கு விரைவில் தமிழக அரசுக்கு சாதகமாக அமையும். அதனால் அங்கு உள்ள இடத்தையும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com