தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடுத்த வாரம் 14ம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கோடை வெய்யிலின் தீவிரம் குறையாத நிலையில்தான் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகளுக்கு மாறாக சில காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோடை வெய்யிலின் காரணமாக புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை என்றாலும், புதிய பாடமுறைகளுக்கு புதுச்சேரி தயாராகவில்லை என்பதுதான் முக்கியமான காரணம் என்கிறார்கள். நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடமுறை பின்பற்றப்படுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் 730க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில் 400க்கும் மேற்பட்டவை அரசு பள்ளிகள். குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இதுவரை தமிழக அரசின் பாடமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடமுறை பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்திருப்பது அரசுப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ஏறக்குறைய 80 சதவீத பள்ளிகளில் புதிய நடைமுறையை ஒரே வாரத்தில் அமல்படுத்த வேண்டியிருக்கிறது. சிபிஎஸ்இ படிப்புகளுக்கான என்சிஇஆர்டி புத்தகங்கள் தட்டுப்பாடு இருக்கிறது. தமிழகத்தின் சென்னை போன்ற நகரங்களில் கூட என்சிஆர்டி புத்தகங்கள் முழுமையாக கிடைப்பதில்லை.
புதுச்சேரி அரசு, அரசுப் பள்ளிகளுக்கு பாடப்புத்தங்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் அடுத்து வரும் இரு வாரங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது.