தமிழக அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி மருந்துகளுக்கு தட்டுப்பாடா?

தமிழக அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி மருந்துகளுக்கு தட்டுப்பாடா?

சமீபகாலமாக தமிழகத்தில் பாம்பு கடியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை யாராவது ஒருவர் பாம்பு கடித்து உயிரிழப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க தனியர் மருத்துவமனைகள் மறுத்துவிடுவதாகவும், அரசு மருத்துவமனைகளின் மெத்தன செயல்பாடும், மருந்துகள் தட்டுப்பாடும் உயிரிழப்பிற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் இரண்டு மகள்கள் பாம்பு கடியில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறது. இன்னொருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் ஓடும் பஸ்ஸில் இருந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. பாம்பு கடியால் உயிரிழந்த பெண், தற்கொலை செய்து கொண்டவரின் பெண்தான்.

இன்னொரு பஞ்சாயத்து வார்டு கவுன்சிலரும் பஞ்சாயத்து செயலாளரும் தன்னை பணியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தியதாக கூறி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டது அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அந்த 5 பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை பாம்பு கடியால் உயிரிழந்திருக்கிறது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சிவக்குமார் என்னும் கூலி தொழிலாளி பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார். தா.பழூர் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது இருட்டில் சாலையில் இருந்த பாம்பை மிதித்தால் காலில் பாம்பு கடித்துள்ளது. இதையெடுத்து தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்துவிட்டார்.

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த அழகுமுத்துவின் மனைவி பெரியம்மாள் வீட்டின் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரிமங்கலம் அடுத்த முரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது மகன் சந்துரு, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அணைக்கட்டு அடுத்த மலைப்பகுதியில் உள்ள அத்திமரத்துக் கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி- பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தையை பாம்பு கடித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்த சம்பவம், சென்ற மாதம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடரும் பாம்பு கடி இழப்புகள், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன. பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில் விஷ முறிவு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆரம்ப சுகாதார மையங்களில் விஷய முறிவு மருந்துகள் இருக்கிறதா என்பதை சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கொரானா உயிரிழப்புக்கு இணையாக உயர்ந்து வரும் பாம்பு கடி இறப்புகளை தமிழக அரசு கட்டுப்படுத்தவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com