இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சாதிகாரத்திற்கு மாறிவிட்டதையே உணர்த்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தில்லியில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியா கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது: ''இந்தியா தற்போதுவரை ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, நாடு ஜனநாகத்தில் இருந்து எதேச்சாதிகாரத்திற்கு மாறவிட்டதையே காட்டுகிறது.
தில்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது. தில்லி கல்வித் துறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் மணீஷ் சிசோடியா. அவர் கைது செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே உலகம் பார்க்கிறது. பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவே உலக நாடுகள் சந்தேகிக்கின்றன.
மத்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவில் சேர்ந்ததும் அவர்களுக்கு எதிரான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மென்மையாகக் கையாளுகின்றன. இதற்கு தற்போதைய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா சிறந்த உதாரணம். கடந்த 2015-இல் அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு அவருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளில் வேகம் காட்டப்படவில்லை.
இதேபோல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக செயல்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளை ஆளுநர்கள் திட்டமிட்டு சீர்குலைக்க முயன்று வருகின்றனர்.
தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரம், மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, தில்லி ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கையே கையாண்டு வருகிறார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதன் காரணமாக, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்'' என்று அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.