கோயில்களில் சமத்துவம் உண்டா? திருமாவளவன் கேள்வி!

கோயில்களில் சமத்துவம் உண்டா? திருமாவளவன் கேள்வி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சமத்துவம் பேணப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அரசு அறிக்கை வெளியிடவேண்டும் என்று விடுதலைக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். வழிபாட்டுக்காக கோயிலுக்கு சென்றவர்கள் வழி மறித்து தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தின் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அனுமதியை மீறி கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தவர்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பதற்றமான சூழலில் தொடர்வதால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் வழிபாட்டிற்காக கோயிலுக்குள் சென்றவர்களை தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இது குறித்து பேசிய திருமாவளவன், 1947-ம் ஆண்டு ஆலய நுழைவு தனிச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், கோயில் நுழைவு தடுக்கப்படுவது வெட்கக்கேடான விஷயம் என்று தெரிவித்திருந்தார்.

விழப்புரத்தில் நடந்த சம்பவம் போல் மதுரை திருமோகூர் கோவிலில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கோயிலுக்கு சொந்தமான கொடி மரம், பெயர்ப்பலகைகளும் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பல்வேறு சம்பவங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வட தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்களுக்கு பா.ம.கவை சுட்டிக்காட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாதி வெறுப்பு அரசியலின் காரணமாகவே இது போன்ற நிகழ்வுகள் தொடர்வதாகவும் இது தொடர்பாக அடுத்தடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்கள் பராமரிக்கப்படுகின்றன. இத்தகை கோயில்களிலேயே சாதிய மறுப்பு நிகழ்வு நடைபெறுவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள திருமாவளவன், இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒடிசா ரயில் விபத்து குறித்தும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது கோயிலுக்குள் வழிபாடு செய்ய மறுக்கப்படுவது குறித்தும் தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கோரியிருக்கிறார். இது கலைஞர் ஸ்டைல் அரசியலாக இருக்கிறதே என்று அறிவாலய வட்டாரங்கள் ஆச்சர்யப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com