பள்ளி ஆசிரியர் செய்யும் வேலையா இது?

பள்ளி ஆசிரியர் செய்யும் வேலையா இது?
Published on

அரசு பள்ளி ஒப்பந்த ஊழியர் தற்கொலை..!

மாங்காடு: அரசு பள்ளி ஒப்பந்த ஆசிரியர் பியூலா சக ஆசிரியை தன்மை கேவலமாகவும், இழிவாகவும் பேசியதால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அரசு பள்ளி ஆசிரியை சௌபாக்கியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் சௌபாக்கியம் (40). இதே பள்ளியில் பியூலா (35) என்பவர் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம் தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில், தலைமை ஆசிரியரின் அனுமதியோடு வகுப்புக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே பியூலா - சௌபாக்கியம் இருவருக்கும்மிடையே வார்த்தை மோதல்கள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருநாள், சௌபாக்கியம், பியூலாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பியூலா பெரும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளார். மனம் நொந்துபோன பியூலா, சௌபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாங்காடு காவல் நிலையத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார்.

தற்கொலை:

ஆனால், காவல் துறையும், பள்ளி நிர்வாகமும் பியுலாவின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த பியூலாவை, தம் மீது புகார் அளித்ததற்காக மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார் ஆசிரியர் சௌபாக்கியம். இதனால் மனம் உடைந்த பியூலா, வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைது:

பியூலாவின் தற்கொலை குறித்து தகவல் அறிந்து வந்த மாங்காடு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பியூலா உறவினர்கள், பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் அறையில் இருந்த சௌபாக்கியத்தை தாக்க முயன்றனர். அப்போது சரியான நேரத்திற்கு அங்கு வந்த காவல்துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சௌபாக்கியம் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணை:

காவல்நிலையம் வந்த பியூலாவின் உறவினர்கள், சௌபாக்கியம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் மாங்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பியூலாவை என்ன காரணத்தினாலோ சௌபாக்கியத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்காமல் போயுள்ளது. அதனால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. “பியூலாவைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டிருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியர் சௌபாக்கியம்” என்று தற்போது வரை நடந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com