ஈஷா மஹாசிவராத்திரி விழா..திருச்சியில் 3 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை..!

isha athiyogi
isha athiyogisource:isha team
Published on

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று (12/01/2026) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் அடியார்கள் மருத்துவர் ராஜ்பிரகாஷ், பாலசுப்ரமணியன் மற்றும் ராகுல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ஆதியோகி ரத யாத்திரை

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

ஆதீனங்களின் அருளாசியோடு…

தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!

இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக திருச்சியை உள்ளடக்கிய கிழக்கு மண்டலப் பகுதிகளில் அதிக அளவில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில்…

ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. நாளை ஜன.13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் மற்றும் ஆத்மநாதசுவாமி ஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக ரதம் பயணிக்கிறது. அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு ஜன 13-ம் தேதி இரவு ஆதியோகி ரதம் வந்தடைய உள்ளது. பின்பு ஜன.17 முதல் 19 வரை திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது.

திருச்சி மாநகரை பொறுத்த வரையில் உக்கிரகாளியம்மன் கோவில், சாஸ்திரி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், டோல்கேட், உத்தமர் கோவில் வழியாக ரதம் பயணிக்க உள்ளது. பின்பு சமயபுரம், வயலூர், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் ரத யாத்திரை நடைபெற உள்ளது. திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக ஆதியோகி ரத யாத்திரை தொடர உள்ளது.

கிழக்கு மண்டலத்தில் இதுவரை...

கிழக்கு மண்டலத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் கடந்த 23-ஆம் தேதி மயிலாடுதுறை வந்தடைந்தது. அதன் பின்பு காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி ஆகிய நகரங்களை கடந்து வந்துள்ளது.

இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாயூரநாதர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவாரூர் தியாகராஜர், கும்பகோணம் கும்பேஸ்வரர் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற்று தற்போது திருச்சிக்கு வரவுள்ளது.

திருச்சியில் மஹாசிவராத்திரி விழா!

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதியோகி ரதம்

ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

சிவ யாத்திரை

இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com