மூளையில் இரத்தக் கசிவு; டெல்லியில் ஆபரேஷன்: எப்படி இருக்கிறார் சத்குரு?

சத்குரு
சத்குரு

கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் ஏற்பட்ட திடீர் கட்டியால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தை நடத்தி வருபவர்தான் சத்குரு. சமீபத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கூட பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கடந்த நான்கு வாரங்களாகவே அவருக்கு தலைவலி இருந்து வந்த நிலையில், கடந்த 17ம் தேதி தலைவலி உச்சத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து சத்குருவுக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சத்குருவை பின்பற்றும் பக்தர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சத்குருவின் மகளும், தந்தை நலமாக இருப்பதாகவே கூறியுள்ளார். இதனால் அவரது பக்தர்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். இருந்தாலும் அவர் முழுவதுமாக குணமடைந்து பேச வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சத்குருவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என் மண்டை ஓட்டை வெட்டி எதையோ கண்டுபிடிக்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. முற்றிலும் காலியாக இருந்தது. எனவே, அவர்கள் அதை கைவிட்டு ஒட்டுப்போட்டனர். இங்கே நான் ஒட்டுப்போட்ட மண்டை ஓட்டுடன் டெல்லியில் இருக்கிறேன். ஆனால், சேதமடைந்த மூளை இல்லை என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com