ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் முஸ்லிம் மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் குர்ஆன் நூல் எரிக்கப்பட்டது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசின் மேட்ட விவகாரத்தில் துருக்கிக்கும் ஸ்வீடன் நாட்டுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது.
தங்கள் நாட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடன் அரசிடம் துருக்கி நாடு கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனின் துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளது. தற்போது இந்தச் சுற்றுப் பயணம் அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்து விட்டதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பால் ஜான்சன் சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிவிக்கையில், “ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹூலுசி அகாரை நான் நேற்று சந்தித்துப் பேசினேன். அந்த சந்திப்பில் பேசியபடி அங்காராவில் நடைபெறவிருந்த சந்திப்பைத் தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், “துருக்கியுடனான ஸ்வீடன் உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொதுவான பிரச்னைகளைப் பற்றி மீண்டும் நாங்கள் சந்தித்துப் பேசுவோம் என்று நம்புகிறோம்” என்ற குறிப்பிட்டுள்ளார்.
‘புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் ஒரு கேவலமான செயல். இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று கடுமையாக விமர்சித்துள்ளது துருக்கி. இதுபோலவே பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் தங்களது கண்டனத்தை ஸ்வீடன் நாட்டுக்குத் தெரிவித்துள்ளன. மேலும், ஸ்வீடனின் தலைநகரில் இஸ்லாமிய மக்களின் போராட்டமும் வெடித்துள்ளது.
கடவுளின் வார்த்தைகள் அடங்கிய நூல் குர்ஆன் என்பது இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை. மேலும், அவர்கள் அதை ஒரு புனித நூலாகக் கருதுகிறார்கள். அதனால் குர்ஆனை திட்டமிட்டு சேதப்படுத்துவதையோ அல்லது அவமதிப்பதையோ அவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.