பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், காசா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்திக் கொண்டு வருகிறது. இந்நிலையில் சிரியா மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யா, உடனடியாக அவர்களின் போர் விமானங்களை சிரியாவில் இறக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு அடைக்கலம் அளித்த பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக உலக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஜெர்மனி யூதர்களை கொன்று குவித்தது. இதிலிருந்து தப்பி அவர்கள் பாலஸ்தீனத்தில் அடைக்கலம் புகுந்தனர். அப்படி அவர்கள் வரும்போது "ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்களுடைய நம்பிக்கையை அழித்து விடாதீர்கள்" என்ற பதாகையை ஏந்திக்கொண்டு வந்தனர். இப்படி தான் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்தார்கள். இவர்களின் பரிதாப நிலையை உணர்ந்த ஐநா சபை 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்து இஸ்ரேலை உருவாக்கியது.
அதன் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தற்போது மிகக்குறுகிய நிலப்பரப்பிலேயே பாலஸ்தீனிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலப்பரப்பில் காசாவும் ஒன்று. இந்த சிறிய நிலப்பரப்பில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த இடத்தை தான் தற்போது இஸ்ரேல் கைப்பற்ற முயல்கிறது. ஆனால் இதை பாலஸ்தீனிய போராளிகள் தங்களால் முடிந்த அளவுக்கு தடுத்து வருகின்றனர்.
தங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகளை இஸ்ரேல் தாக்கியதால் தான், ஹமாஸ் என்ற இயக்கம் கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது நடந்த இப்படிப்பட்ட தாக்குதல், அதுவும் காசா என்ற சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டதால் உலக நாடுகளின் பார்வை இவர்களின் மேல் திரும்பியது. இதைத்தொடர்ந்து இன்றுடன் ஏழாவது நாளாக காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் திடீரென சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா என்ற இயக்கம் செயல்படுவதாகக் கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எவ்விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவும் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதில் கோபமடைந்த ரஷ்யா, தங்களின் கண்டனத்தை தெரிவித்து, ரஷ்ய விமானப்படையின் போர் விமானங்களை சிரியாவின் லடாகியா விமான தளத்தில் தரையிறக்கியுள்ளது. இதனால் அந்த போர்க்களம் மேலும் உக்கிரமடைந்துள்ளது.