
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துவிட்டார்.
ஹமாஸ் பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போர் நடந்து வரும் வேளையில் மூன்றாவது முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கென், ஜோர்டானில் லெபனான் நாட்டு தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஹாமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது அதிரடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலு எல்லைப்பகுதிக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலையும் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனிடையே இஸ்ரேலியர்கள் 200-க்கும் மேலானவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. ஏவுகணை தாக்குதலும் நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாயின. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 3000 பேர் பலியானார்கள். காசா பகுதியில் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உணவுப் பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
எனினும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல் காரணமாக இதுவரை 9,000 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவிலுள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பாலஸ்தீனியர்களும் வெளிநாட்டினரும் அடங்குவார்கள். இது தவிர இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள காசா மேற்கு கரையில் 140 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காசா நகரை சுற்றிவளைத்துள்ளனர். மிகப்பெரிய தாக்குதலுக்கும் தயாராகி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், ஆம்புலன்ஸ்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.
இதனிடையே இஸ்ரேஸ் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், லெபனான், ஜோர்டான், சவூதி அரேபியா மற்றும் எகிப்து நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீன தலைவர்களை சந்தித்து அங்கிருக்கும் அமெரிக்கர்களை வெளியேற்றுவது குறித்தும் பிளிங்கென் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.