சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பதில் தாக்குதலை நடத்த ஈரான் திட்டம் தீட்டியது. அந்தவகையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல மாதங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில நாடுகள் இஸ்ரேலுக்கு துணையாகவும் உள்ளன. அந்தவகையில், ஏப்ரல் 1ம் தேதி இஸ்ரேல் ஈரான் தூதரகம் மீது வான் வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் உட்பட ராணுவ அதிகாரிகள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கடும்கோபத்தில் இருந்துவந்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது என்றும் எச்சரித்தது.
இதனையடுத்து, நேற்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு சுமார் 40 ஏவுகணைகளை வடக்கு இஸ்ரேல் பகுதியில் வீசியிருக்கிறது. ஆனால், இஸ்ரேலிடம் ஏவுகணைகளை இடைமறிக்கும் Iron Dorm அமைப்பு இருப்பதால், இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. ஏவுகணை மட்டுமல்லாது, வெடிப்பொருட்கள் நிரப்பிய ட்ரோன்களை கொண்டும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறது. இதனையும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை ஈரான் நேரடியாகவே இஸ்ரேலை தாக்கவுள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் கூறுகின்றன. இன்னும் 24 மணி நேரத்தில் ஈரான் போரைத் தொடங்கினால், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரிப்போர்ட் கூறுகிறது. ஏனெனில், ஈரானிடம் 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உள்ளன.
இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்கா படையையும் பாதுகாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. மேலும், அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்கப்பல்கள் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்கா இதுகுறித்து கூறுகையில், “சிரியாவில் இனி தாக்குதல் நடத்தாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆகையால், ஈரான் உடனே போர் முடிவைக் கைவிட வேண்டும்.” என்று கூறியது. இதற்கு இஸ்ரேல், “நாங்கள் எங்கள் தாக்குதலை தொடர்வோம்.” என்று வெளிப்படையாகக் கூறியது.
அதேபோல் ஈரானும் போருக்கு தயாராகி வருகிறது. இந்தப் போர் வெடித்தால், பிராந்திய போராக மாறும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், அமெரிக்கா அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது.