ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்காமல் விடமாட்டோம்: இஸ்ரேல் சபதம்!

இஸ்ரேல் நாடாளுமன்றம்
இஸ்ரேல் நாடாளுமன்றம்

பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ள நிலையில் இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் தரைப்படை தாக்குதலை முன்னெடுப்பதிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிப்பதே எங்கள் நோக்கமாகும். காசா தெற்கு பகுதியில் பெரும் தாக்குதல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் பகுதிகள் மீது அதிரடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் தரைவழித் தாக்குதலும் நடத்தினர். இதில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது 200 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா நகரம் மீது அதிரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. காசா மீது குண்டுமழை பொழிந்தது. இதில் காசா பகுதியில் இருந்த பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. குழந்தைகள், பெண்கள் உள்பட 4,000 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 15 நாட்களாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா பகுதியில் தரைப்படைகளை குவித்துள்ள இஸ்ரேல், அங்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்தவும் தயாராகி வருகிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்தாலும், பிணைக் கைதிகளை விடுவிக்க மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக காசாவில் தரைப்படை தாக்குதலை நிறுத்திவைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு வழியேற்படுமா என்ற கேள்விக்கு முதலில் ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்தும் பதில் தாக்குதலில் ஏராளமான சிவிலயன்கள் கொல்லப்படுவது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கவலை வெளியிட்டுள்ளார்.  எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அவர் இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 426 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,500 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே காசா பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மனிதாபிமான முறையில் அங்கு உணவு, குடிநீர், மருந்துகள், எரிபொருள்கள் கொண்டுசெல்லப்பட வசதியாக இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐ.நா.வும், ஐரோப்பிய தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com