சர்ச்சை மசோதா - இஸ்ரேல் பிரதமருக்கு வெற்றி!

இஸ்ரேல் நாடாளுமன்றம்
இஸ்ரேல் நாடாளுமன்றம்

லகின் ஒரே யூத நாடாக இருந்துவரும் இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை அதிகார மசோதா, நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குக் கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது.

முன்னதாக, கடந்த வாரம் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெருசலேம் நகரில் இருந்து தலைநகர் டெல் அவிவ் நோக்கி, ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியாகச் சென்றனர். கடந்த சனிக்கிழமை முதல் நீசட் எனப்படும் நாடாளுமன்றக் கட்டடம் முன்பாகவும் அருகில் உள்ள உச்சநீதிமன்றம் முன்பாகவும் அவர்கள் திரண்டனர். மசோதாவை எதிர்த்து, சுமார் 70 கிமீ தொலைவுக்கு பேரணியாக வந்த அவர்கள், தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் பலவித முயற்சிகளில் ஈடுபட்டனர். குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்த முயன்ற அவர்களின் வேலை பலிக்கவில்லை. பின்னர் தொடர்ச்சியாக நீர்த் தாரை எந்திரத்தால் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் போலீசார் ஈடுபட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் சளைக்காமல் மசோதா நிறைவேறிய இரவுவரை நாடாளுமன்றப் பகுதியை விட்டு நகரவில்லை.
போராட்டம் தொடர்பாக 22 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடுமையான போராட்டத்துக்கு இடையிலும் நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசிச் சுற்றில் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைப் புறக்கணித்ததால், 64 வாக்குகளுடனும் எதிர்ப்பே இல்லாமலும் நெதன்யாகு அரசின் புதிய மசோதா நிறைவேறியது. இஸ்ரேலைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் அமெரிக்க அரசுகூட, இது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும், இஸ்ரேலில் பல மாதங்களாக நீடித்துவந்த நீதித்துறை அதிகார சட்டமசோதா விவகாரம் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. முன்னதாக, திங்களன்று நாட்டின் அதிபர் இதில் பகிரங்கமாகத் தலையிட்டு, சிக்கல் நீடித்தால் அவசர நிலையைக் கொண்டுவர வேண்டியிருக்கும் என்று அறிவித்தார். கடந்த சனிக்கிழமை திடீரென இதய பாதிப்பு என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், பிரதமர் நெதன்யாகு. அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் பொருத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதையும் மீறி, மசோதா வாக்கெடுப்பில் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி புதிய சட்டத்தின் மூலம் எழுதப்பட்ட அரசமைப்புச்சட்டம் இல்லாத இஸ்ரேலில், நடைமுறையில் அரசைக் கேள்வி கேட்கும் அதிகாரம், உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. அந்த அதிகாரத்தைக் குறைத்து அரசின் அதிகாரத்தை மேலோங்கச் செய்து, நெதன்யாகு அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதை நீதித்துறைச் சீர்திருத்தம் என அரசுத் தரப்பும், ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும் என எதிர்ப்பாளர்களும் கூறுகின்றனர்.
 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com