சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், பூமி மற்றும் நிலவு இருக்கும் படத்தை அனுப்பியுள்ளது.
'ஆதித்யா- எல்1' விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. -சி57 ராக்கெட் வாயிலாக கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம், 125 நாட்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள, 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' என்ற பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்1 சுற்றி வரும் நிலையில் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் விண்கலத்தின் செல்பியும், நிலா மற்றும் பூமியின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 4ஆம் தேதி இப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அவ்வப்போது ஆதித்யா எல்1 குறித்த அப்டேட்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே நிலவிற்கு சென்ற ரோவர் தற்போது ஓய்வெடுத்து வரும் நிலையில் அனைவரின் கவனமும் ஆதித்யாவை நோக்கியுள்ளது.