

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களுக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களுக்கு தடைக்கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எம்எல்ஏவாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்தது வாக்களித்தவர்களை அவமதிப்பதாகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது கேலிக்கூத்து. குறுகிய காலத்தில் ராஜினாமா செய்வது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ராஜினாமா செய்தவர்களே இடைத்தேர்தல் செலவுகளுக்கு (இடைத்தேர்தல் உத்தரவு) பொறுப்பாகும் வகையில் நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
ஒரு கட்சியில் வென்றவர்கள் ராஜினாமா செய்து விட்டு மற்றொரு கட்சியில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மக்கள் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்களை தடுக்க தற்போதைய சூழலில் வழிகாட்டுதல்கள் இல்லை.
சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது எழுந்துள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.