’மது குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்தான் தப்பு; தள்ளிக்கொண்டு வந்தால் தப்பில்லை’ போலீஸ்காரரைத் தாக்கிய பெண்!

’மது குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்தான் தப்பு; தள்ளிக்கொண்டு வந்தால் தப்பில்லை’ போலீஸ்காரரைத் தாக்கிய பெண்!

சென்னையில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் சூளைமேடு நெல்சன்மாணிக்கம் சாலையில் எஸ்ஐ லோகிதர்ஷன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் பைக்கை தள்ளி கொண்டு வந்துள்ளார். இதை கவனித்த எஸ்ஐ அந்த வாலிபரை அழைத்து வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர், 'ஆவணங்கள் தற்போது கையில் இல்லை, வீட்டில் இருக்கிறது' என்று கூறியுள்ளார். உடனே போலீசார், 'பைக் உங்களுடையதா அல்லது திருட்டு வண்டியா' என்று கேட்டு இருக்கிறார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர் பெண் ஒருவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். அந்தப் பெண், எஸ்ஐயிடம், ’குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்தான் தப்பு. தள்ளிக் கொண்டு வந்தால் பைன் போட கூடாது' என்று வாக்குவாதம் செய்தார்.

இதை போலீசார் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். உடனே அந்த பெண், 'நீ வீடியோ எடு. பேஸ்புக்கில் போடு. ஒன்றும் செய்ய முடியாது' என்று ஒருமையில் பேசி உள்ளார். அதோடு சண்டையைத் தடுக்க முயன்ற காவலர் வெள்ளத்துரையின் சட்டையை பிடித்து அந்த பெண் தாக்கி உள்ளார். பிறகு எஸ்ஐ, 'நாளை காலையில் காவல்நிலையத்துக்கு வாங்கமா' என்று கூறி இருக்கிறார். அதற்கு அந்த பெண், 'எம்எல்ஏவை அழைத்து வரட்டா. யாரை அழைத்து வர வேண்டும்’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு போலீசார், 'நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாங்க' என்று கூறி இருக்கிறார். வாகன சோதனையின்போது பெண் ஒருவர் பணியில் ஈடுபட்ட போலீசாரை ஒருமையில் பேசுவதும், அடிக்க பாய்ந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே வாகன சோதனையின்போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக காவலர் வெள்ளத்துரை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் அந்த வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண், சூளைமேடு பகுதியை சேர்ந்த அக்‌ஷயா என்பதும், அவரது கணவர் சத்யராஜ், நண்பர் வினோத் என்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்‌ஷயா, அவரது கணவர் ஆகியோர் மது போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சூளைமேடு போலீசார், அக்‌ஷயா, அவரது கணவர் சத்யராஜ் மற்றும் வினோத் ஆகியோர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com