சென்னையில் பிரபல நிறுவனங்களில் ஐடி ரெய்டு
சென்னையில், அசோக் ரெசிடென்சி மற்றும் ஆதித்யா ராம் குழுமம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான 20-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணாநகர், மணலி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய நிறுவனங்களான அசோக் ரெசிடென்சி, ஆதித்ய ராம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் நான்கு வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருகை புரிந்ததாக தெரிகிறது. வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இ
இதுதவிர சில ஹாஸ்பிடாலிட்டி குழுமங்கள், ஓட்டல்கள் நடத்தும் குழும நிறுவனத்திலும் ரெய்டு நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஓட்டல்களை நிர்வகித்து வரும் நிறுவனத்தின் மீது தான் அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறுகின்றனர். இதையொட்டி ரெய்டு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வீடு, அலுவலகங்களில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், புதிதாக யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் ஐடி ரெய்டால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் ஒட்டுமொத்த கவனமும் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. இந்த சூழலில் இன்றைய தினம் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் எதிர்க்கட்சி பிரமுகர்களா?இல்லை அவர்களுக்கு ஆதரவாகவோ, பினாமியாகவோ செயல்படுகிறார்களா? ஆளுங்கட்சிக்கு டெல்லி கொடுக்கும் அழுத்தமா? போன்ற கேள்விகளை எழுப்பிகிறது.
அடுத்த சில மணி நேரங்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அதன் முடிவில் சிக்கிய ஆவணங்கள், ரொக்கம், வரி ஏய்ப்பு செய்த சொத்து விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
இதையொட்டி ரெய்டு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.