கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது - புதுச்சேரி முதல்வர் ஆதங்கம்!

கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது - புதுச்சேரி முதல்வர் ஆதங்கம்!
Published on

முதல்வர் இருக்கையில் ஏன் இருக்கிறோம் என்றெல்லாம் தோன்றுகிறது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். கொரானா தொற்றுக்க காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்டபோது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டார்கள். 250-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கிறார்கள். பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்கிற அவர்களது கோரிக்கை நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் புதிய செவிலியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கூடிய விரைவில் நடைபெறவிருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து தற்காலிக பணியில் உள்ள செவிலியர்கள் போராரட்டத்தில் குதித்திருக்கிறார்கள். பணி நியமன விதிகளை தளர்த்தி, தங்களை நிரந்தரம் செய்யுமாறு ஒப்பந்ததாரர்களாக உள்ள செவிலியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இதையெடுத்து சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் சட்டமன்ற வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் இறங்கினார்கள். இதையெடுத்து ஆளுங்கட்சியினர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர். செவிலியர்களுடனான முதல்வரின் சந்திப்பும் நடந்தது.

முதல்வருடன் நடந்த சந்திப்பின்போது, செவிலியர்களுக்கு முன்னுரிமை தருவது குறித்து பேசியிருக்கிறார். முன்பு இருந்த நிர்வாகம் வேறு. தற்போது இருப்பது வேறு. கொரோனா காலத்தின்போது நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒப்பந்தம் முடிந்ததும் பணியில் இருந்து விடுவிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. நான்தான் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணி ஒப்பந்தத்தை நீட்டித்து வருகிறேன் என்றவர், தொடர்ந்து பேசும்போது, பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியில் இருப்பவர்களுக்கே எதுவும் செய்ய முடியவில்லை. முதல்வர் இருக்கையில் ஏன் அமர்ந்திருக்கிறோம் என்பதே தெரியவில்லை. முதல்வர் சொன்னால் முன்பெல்லாம் பணிகள் நடைபெறும். ஏதாவது விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை தேடிப் பார்க்க வேண்டியுள்ளது என்று ஆதங்கமாக பேசியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

முதல்வரின் ஆதங்கத்திற்கு காரணம் தெரியவில்லை. இதே போல் தமிழகத்திலும் கோரிக்கை இருந்து வருகிறது. கொரானா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கைகள் தொடர்நது நிலுவையில் இருக்கின்றன. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் இதே பிரச்னை நீடிக்கிறது. முதல்வரின் ஆதங்கத்திற்கு அதிகாரிகள் மத்தியில் ஒத்துழைப்பு கிடைக்காததுதான் காரணம் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com