அக்கினேனி குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா

அக்கினேனி குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா
Published on

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா,  விளையாட்டாகவும் கோபப்பட்டும் சில செயல்களைச் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதைத் தூக்கி எறிந்தார். பின்பு மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்ற நிலையில், அந்தக் குழந்தையை விளையாட்டாக அடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார். இதுபோன்று பாலகிருஷ்ணா செய்த பல நிகழ்வுகள் சர்ச்சையாயின. 

பாலகிருஷ்ணா நடித்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், இதுவரை 128.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கிடையில் இந்தப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்திருந்தது.

அதில் பேசிய நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நாகர்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் பெயரைக் குறிப்பிட்டு, மரியாதை குறைவான விதத்தில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது திரைப்பிரபலங்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார். இது அக்கினேனி குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பாலகிருஷ்ணாவின் பேச்சிற்கு அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

சமூகவலைத்தளத்திலும் இது பேசுபொருளானது. இதையடுத்து மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் பேரனும், நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் தங்களது கண்டனங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

தெலுங்கு திரை உலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கும், நாகார்ஜுனாவுக்கும் எப்பொழுதுமே போட்டி உண்டு. மேலும் இருவரும் நட்பாகவும் பழகிக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இவ்வறிக்கையை நாகார்ஜுனாவின் மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோர் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக நந்தமூரி பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த விழாவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் பாபாய் என மூத்த உறவுமுறைபோல் அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரை அழைத்து, 'சித்தப்பா (அக்கினேனி நாகேஸ்வரராவ்) என்னை அவரது சொந்த குழந்தைகளைவிட அதிகம் நேசித்தவர். எப்போதும் என் மீது அதிக பாசம் காட்டி வந்தவர். அதனால் அவர் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சொல்ல வந்தது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com