

விவசாயம் நமது உயிர்நாடி என்றால், அதற்கு உதவும் மாடுகள் அதன் முதுகெலும்பாகும். அந்த மாடுகளைக் கௌரவிக்கும் விதமாகவும், நமது இளைஞர்களின் வீரத்தை நிரூபிக்கவும் நடத்தப்படும் உன்னதமான விளையாட்டு ஜல்லிக்கட்டு.
சங்க காலம் (கி.மு. 300 – கி.பி. 300) முதலே நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் மிகப்பழைமையான பாரம்பரிய விளையாட்டாகும்.விவசாய வாழ்க்கையுடன் இணைந்த இந்த வீர விளையாட்டு, நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கும், வீரத்தை வெளிப்படுத்துவதற்கும் நடத்தப்பட்டது. பொதுவாக தை மாதம் பொங்கல் விழாவில் (மாட்டுப் பொங்கல்) ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
காலப்போக்கில் பாதுகாப்பு,விலங்குரிமை காரணங்களால் தடைகள் விதிக்கப்பட்டாலும், 2017-ல் தமிழர்களின் போராட்டத்துக்குப் பின் சட்ட மாற்றங்களுடன் மீண்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பொங்கல் பண்டிகையில் பல ஊர்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
விளையாட்டாக மட்டுமின்றி தமிழர் அடையாளமாகப் பார்க்கப்படும் இந்த விளையாட்டு, புகழ்பெற்ற மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான நேற்று (15-01-2026) நடைபெற்றது.அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில், 1,000 காளைகள், 550 காளையர்கள் களம் இறக்கப்பட்ட முதலில் திட்டமிடப்பட்டது. காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:30 மணிக்கு நிறைவடைந்த இந்த போட்டியில் 937 மாடுகள் களமிறங்கியது.
பிடிபடாமல் திமிறி போங்கு காட்டிய காளை மாடுகள் நீயா நானா பார்த்து விடுவோம் என அவற்றை அடக்கிய வீரர்கள் இந்த வீரக்காட்சிகளைக் கண்டு ஆர்பரித்த பார்வையாளர்கள் என விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற வீரர் 22 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்து 8 லட்சம் மதிப்புடைய கார் பரிசாக பெறுகிறார். அதேபோல் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனம் பெறுகிறார்.16 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ரஞ்சித் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
வீரர்களுக்கு மட்டுமல்ல..பிடிபடாமல் வெற்றி கண்ட காளைமாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட இந்த போட்டியில் முதலிடம் பிடித்த விருமாண்டி பிரதர்ஸ் காளைக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.
இந்த வீர விளையாட்டில் 60 பேர் காயமடைந்துள்ளனர். 11 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது வீர விளையாட்டு என்பதால் இந்தக்காயங்களை பெருமையாகவே எண்ணுகின்றனர் இதில் பங்கு பெற்ற வீரர்கள்.
முதலிடம் பிடித்த வலையன்குளம் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலமுருகன், "இந்த வெற்றியை எனது அண்ணன் விளாச்சேரி விஷ்வாவிற்குச் சமர்ப்பிக்கிறேன். நான் பட்டப்படிப்பு (Degree) முடித்துள்ளேன். என்னைப்போல கஷ்டப்பட்டு முன்னேறி வரும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கினால் அது எங்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்," என்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சின்னப் பிள்ளையிலிருந்து மாடு பிடித்து வருகிறேன். டிகிரி முடித்து இருக்கிறேன் கவர்மெண்ட் வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். மாடு பிடித்து வருபவர்களுக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும். முதலிடம் பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல இரண்டாவது மூன்றாவது இடம் பிடித்தவர்கள் என அனைவருமே கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறோம்'' என்று கூறியது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தடை நீக்க உதவிய அரசு, வேலை வாய்ப்பு இந்த வீரர்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி என்கின்றனர் ஆர்வலர்கள்.