

வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வருமான வரி செலுத்த வேண்டிய காலக்கெடுவை மத்திய அரசு நீடித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையைத் (ITR) தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் கணக்குத் தணிக்கை (Audit) செய்ய வேண்டிய அனைவரையும் சற்று ஆசுவாசப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தணிக்கை செய்வோருக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 31, 2025 கடைசி தேதியாக இருந்தது. இப்போது, இந்தத் தேதி டிசம்பர் 10, 2025 வரை சுமார் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் இந்த அறிவிப்பு தொடர்ச்சியாக நாட்டில் பெய்த கனமழை , இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, வருமான வரி செலுத்த வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்க வரி வல்லுநர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் உயர் நீதிமன்றங்கள் அளித்த உத்தரவுகளையும் பின்பற்றி இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் கார்ப்பரேட் நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் (Partnership Firms), மற்றும் பெரிய அளவில் வருமானம் உள்ள உரிமையாளர்கள் போன்ற வருமான வரி செலுத்துவோருக்குப் பெரும் நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. இந்த காலக்கெடு நீட்டிப்பின் மூலம் வருமான வரி தாக்கல் அறிக்கையில் பிழைகள் எதுவும் இல்லாமல், நிதானமாகத் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்து தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் தணிக்கை அறிக்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் தேதி காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் , தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கும் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கும் வரி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்து நிம்மதி அளித்துள்ளது. இவர்களுக்கான வருமானவரி தாக்கல் செய்யும் காலக்கெடு முதலில் ஜூலை 31-லிருந்து செப்டம்பர் 15 வரை இருந்தது.பின்னர் அது ஒருநாள் சேர்த்து செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தேதிக்குள் 7.54 கோடிக்கும் அதிகமான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. சுமார் 1.28 கோடி வரி செலுத்துவோர் சுய மதிப்பீட்டு வரி செலுத்துதல்களைச் செய்தனர்.
இதையடுத்து, வருமான வரிக் கணக்கு மற்றும் வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31 ஆக இருந்த காலக்கெடு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.