இது விவசாயிகளுக்கான அரசு EPS க்கு பெரிய கருப்பன் பதிலடி!

karumbu
karumbu
Published on

கரும்பு கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல், திமுக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்று கரும்பு கொள்முதல் பற்றி உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து நான்கு பொங்கல் விழாக்களைக் கொண்டாடி இருக்கிறார். அப்போது அவர் கரும்பு வழங்கிட வெளியிட்ட அரசாணைகளை அவரே முழுமையாகப் பார்த்திருக்கலாம். அவர் பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது முன்னாள் முதல்வருக்கும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Edapadi palanisamy
Edapadi palanisamy

அவர் முதல்வராயிருந்த 2021 பொங்கலுக்கு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் தொகை, வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு, போக்குவரத்துச் செலவு உட்பட ரூ.30/- வழங்க ஆணையிடப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெற்ற முழு நீளக் கரும்பிற்கு அரசால் ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது முந்தைய அ.தி.மு.க. அரசு அறிவித்த ஒரு கரும்பின் கொள்முதல் விலையான ரூ.30-ஐ விட 10% அதிகமாகும். இதுவும் விவசாயிகளுக்கு வழங்கும் தொகையுடன் வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை சேர்ந்ததாகும்.

விவசாயிகளுக்கு “எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னனுப் பரிமாற்ற முறையில் கரும்புக்கான தொகை செலுத்தப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 2011 முதல் 2021 வரையான கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில், ரூ.60,646.43 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் 16,80,054 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.8742.58 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற 21 மாத காலத்திலேயே ரூ. 20,653.56 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது; புதிய உறுப்பினர்களுக்கு ரூ.3027.86 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளதோடு 1,50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கான அரசுதான் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com