புதுசு கண்ணா புதுசு! திருப்பதி லட்டுகள் இனிமேல் பனை ஓலைப் பெட்டியில்…

திருப்பதி
திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் , திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுக்களை இனி வரும் நாட்களில் பனை ஓலைப் பெட்டியில் அளிக்க முடிவெடுத்துள்ளது. இதுவரை திருப்பதி ஸ்பெஷல் பிரசாதங்களான லட்டுகள் துணிப்பையிலோ அல்லது பிளாஸ்டிக் பைகளிலோ தான் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தன் பங்கிற்கு வேங்கடவனின் பிரசாதத்தை இனிமேல் பாரம்பரிய பனைஓலைப் பெட்டிகளில் அளிக்கலாம் எனும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தப் பனைஓலைப் பெட்டிகள் கைகளால் தயாராகக் கூடியவை. இவற்றைப் பயன்படுத்துவதால் பனைஓலைப் பெட்டிகள் செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடிவதுடன் மக்களுக்கு பனை ஓலைப் பெட்டிகளின் அருமையையும், அவசியத்தையும் உணர்த்த முடியும் என்பது திருமலை தேவஸ்தானத்தின் நம்பிக்கை.

இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, "விரைவில் பனை ஓலை மற்றும் தென்னை ஓலைகளால் பின்னப்பட்ட பெட்டிகளில் மட்டுமே லட்டுகள் விற்கப்படும். இதற்காக 10ரூபாய், 15ரூபாய், 20ரூபாய் என மூன்று வகையான அளவுகளில் பனை ஓலைப் பெட்டிகள் இங்கேயே தனி கவுண்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்பதோடு கிராமப்புற மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உண்டாக்க முடியும்" என்றார்.

70 களில் தென்னக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டில் பனை ஓலைப்பெட்டிகள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் விளையாட்டுச் சாமான்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவை பெரும்பங்கு வகித்தன. பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பல் நோக்கு உபயோகப் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும் பனை ஓலைகள் மற்றும் தென்னை ஓலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டும் பெட்டிகள், கூடைகள், விசிறிகள், அலங்கார தோரணங்கள், கூரைகள் உள்ளிட்டவை படிப்படியாகக் குறையத் தொடங்கின. இதனால் மக்களில் ஒரு சாரருக்கு வாழ்வாதாரம் சீர்குலைந்தது என்பதோடு அதீத பிளாஸ்டிக் புழக்கத்தின் காரணமாக சுற்றுச்சூழலும் கவலைக்கிடமான வகையில் மிகவும் சீர்கேடாகிப் போனது. இவற்றை நேர் செய்யும் நோக்கில் இப்போது மாநில அரசுகளும், தனியார் அமைப்புகளும் இது போன்று தங்களால் இயன்ற நன்முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதனால் சுற்றுச் சூழல் சீர்கேட்டைப் பெருமளவில் குறைக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். அது உண்மையும் கூட.

முன்பெல்லாம் மார்ச் இறுதி முதலே அதாவது வெயில் காலத்தின் தொடக்கம் முதலே தெருவில் பதனி விற்பவர்களை அதிகமும் காண முடியும். அவர்களிடம் பதனி வாங்கிக் குடிக்க வேண்டுமெனில் பாத்திரம் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. பனை ஓலையைக் கிழித்து நுனியில் முடைந்து கிண்ணம் போலாக்கி அவர்களே ஒரு கோப்பை தயார் செய்து அதில் பதனியை வார்த்துத் தருவார்கள். பச்சைப் பனை ஓலை வாசத்துடம் பதனியின் வாசமும் சேர்ந்து மணக்க மணக்க வாயும் வயிறும் குளிரக் குளிர பதனி அருந்தலாம். அது ஒரு கனாக்காலம். அதெல்லாம் இனி திரும்ப வருமோ, வராதோ! ஆனால், பனை ஓலைப்பெட்டியில் லட்டாவது வரட்டுமே! இது வரவேற்கத்தக்க முயற்சியே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com