ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டத்தில் அந்த பகுதியில் தனியார்கள் டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். இத்தடை ஜூலை 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என பூரி போலீசார் அறிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைந்த புனிதத் தலம், பூரி ஜெகந்நாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.இங்குள்ள ஜெகந்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் மிக முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை என்பது அதன் தனி சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். கோவில், தேர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பூரியின் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இதுபோல், தடையை மீறி டிரோன் பறக்க விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
டிரோன்கள் மூலம் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் காயத்துக்கு அதை இயக்கியவர்களே பொறுப்பு என்றும் அறிவித்துள்ளார். தேரோட்டத்தின்போது, போக்குவரத்தையும், மக்கள் கூட்டத்தையும் கண்காணிக்க பூரி மாவட்ட போலீசார் மட்டும் டிரோன்களை பயன்படுத்துவார்கள் என்று போலீசார் தொிவித்து உள்ளனர்.