தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் திகழ்ந்த இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அதிமுகவில் சேர்ந்து பணியாற்றி வந்த ஜே.கே.ரித்தீஷ், எதிர்பாரதவிதமாக 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி பெயர் ஜோதீஸ்வரி. இவர் காரைக்குடியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் வாங்கி இருந்தார். இந்தப் பொருட்களுக்கான பணத்தை ரொக்கமாகத் தராமல் 20 லட்ச ரூபாய்க்கு மூன்று காசோலைகள் கொடுத்து இருக்கிறார் ஜோதீஸ்வரி.
இந்த மூன்று காசோலைகளையும் திருச்செல்வம் வங்கியில் செலுத்தியபோது, அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்திருக்கிறது. இது குறித்து ஜோதீஷ்வரியிடம் கேட்டபோது, தான் பணத்தை மொத்தமாகத் தந்துவிடுவதாக கூறி நீண்ட நாட்கள் கால தாமதம் செய்திருக்கிறார். சொன்னபடி பணத்தைத் தராமல் ஏமாற்றி வந்ததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபிரதா, நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார். ஜோதீஸ்வரிக்கு காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நடிகர் ரித்தீஷ் ஆதரவாளர்களிடமும் உறவினர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.