பள்ளி மாணவர்கள் வாகனத்தை ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை

பள்ளி மாணவர்கள் வாகனத்தை ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் அஜாக்கிரதையாக செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. மாணவர்களின் உயிரிழப்பைத் தடுக்க போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கேற்ப சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. சில பெற்றோர்கள் பெருமைக்காக தங்கள் பிள்ளைகளிடம் வாகனத்தைக் கொடுத்து ஓட்ட அனுமதிக்கின்றனர். மாணவர்கள் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாகச் செல்கின்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 (ஏ)ன்படி உரிய ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

 இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

"ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களில் அதிக விபத்துகள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால்தான் ஏற்படுகின்றது.

இந்த விபத்துகளில் அதிகளவு தலையில் அடிபடுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் அவர்கள் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்படி, அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.

இதையடுத்து, இரண்டாவது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 194 (D) -ன் படி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். 

 மேலும், பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். மேலும், பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் சிறுவர்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்களுக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதமும் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.பெற்றோர்கள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்திட வேண்டும்.

ஆகவே, அனைவரும் பாதுகாப்பாக, வாகனத்தை விபத்தில்லாமல் இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை மோட்டார் வாகன விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com