
திகார் சிறையில் இருக்கும் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மனைவியைப் பார்க்க நீதிமன்ற அனுமதியுடன் இன்று சனிக்கிழமை வீட்டுக்கு சென்றார்.
தில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் துணை முதல்வராகவும், கலால் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் மணிஷ் சிசோடியா. புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டது.
மணிஷ் சிசோடியாவின் மனைவி சீமா மூளைக்குச் செல்லும் நரம்புக்கோளாறு மற்றும் முதுகுத்தண்டுவட கோளாறால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அவரை நேரில் சென்று பார்க்க, மணீஷ் சிசோடியா, தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனைவியை காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் பார்க்க அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, திகார் சிறை வேன் மூலம், தில்லியில் மதுரா சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்புடன் மணிஷ் சிசோடியா சென்றார்.
தில்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அப்போது துணைநிலை ஆளுநராக இருந்த வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக ஒரு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உடல் நலம் குன்றிய மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அவரது கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊழல் நடவடிக்கை எதிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மணீஷ் சிசோடியா கூறிவருகிறார்.