ஜெயிலர் 2 படப்பிடிப்பில் அசம்பாவிதம் - இளைஞர் ஒருவர் பலி!

Jailer 2 accident
Rajinikanth film accident
Updated on
Summary

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 திரைப்படம் தொடங்கப்பட்டு அதன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில், பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் , மிதுன் சக்கரவர்த்தி , சிவராஜ் குமார் , ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு , மிர்னா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் காட்சிகள் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சில காட்சிகள் படம் பிடிக்கும்போது , படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்த எலக்ட்ரிஷன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நபரின் பெயர் கார்த்திகேயன்(வயது 32) என்பதும் அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் என்பதும் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

இவர் தளத்தில் சில நாட்களாக மின்விளக்குகள் மற்றும் வயரிங் பணிகளை கவனித்து வந்துள்ளார்.இவர் வயரிங் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக , உயிர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் அவரை கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எலக்ட்ரீசியன் உயிரிழக்க காரணம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்று காவல்துறை விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் எலக்ட்ரீஷியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

திரைப்படங்களின் படப்பிடிப்புகளின் பொழுது, தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது போன்று 'இந்தியன்- 2' படப்பிடிப்பின் பொழுதும் , கிரேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புகளில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு என்ன மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பது குறித்து விவாதங்கள் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த விபத்தினை தொடர்ந்து ஜெயிலர் –2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மின் கசிவு ஏற்பட்ட காரணம் குறித்தும் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் கார்த்திகேயனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் திரைத்துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com