
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்தபோதிலும், இந்தியா தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்து எதிர்த்து வரும் வாஷிங்டனுக்கு அவர் வெளிப்படையான பதிலடி கொடுத்தார்.
‘தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றம் 2025’-ல் உரையாற்றிய ஜெய்சங்கர், ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை அதிக வரி விதித்த முடிவை கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்கா, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, புதுடெல்லியை மாஸ்கோவிடம் இருந்து விலகும்படி அழுத்தம் கொடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறியது. ஆனால் ஜெய்சங்கர் இதை “தவறான குற்றச்சாட்டுகள்” என்று வர்ணித்தார்.
மேலும், “இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், எங்களிடம் இருந்து வாங்க வேண்டாம்.
உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஐரோப்பாவும், அமெரிக்காவும் வாங்கிக்கொண்டிருக்கையில், உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அதை வாங்க வேண்டாம்,” என்று அவர் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் திறந்தே இருக்கின்றன என்றும், அங்கே எந்த ஒரு “முறிவும்” ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தியாவின் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா சமரசம் செய்யாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.
“எங்கள் எல்லைகள் முதன்மையாக எங்கள் விவசாயிகளின் நலன்கள் மற்றும் ஓரளவு எங்கள் சிறு உற்பத்தியாளர்களின் நலன்கள் தான்.
ஒரு அரசாங்கமாக நாங்கள் அந்த நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் நாங்கள் சமரசம் செய்ய முடியாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை பாணியையும் ஜெய்சங்கர் வெளிப்படையாகப் பேசினார்.
மொத்தத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுயநலன்களைப் பாதுகாப்பதிலும், உலக அரங்கில் அதன் இறையாண்மையைத் தக்கவைப்பதிலும் உறுதியாக உள்ளது என்பதை இந்த கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தின.
“இந்த மாற்றம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல. அதிபர் டிரம்ப் உலகத்தை கையாண்ட விதமும், அவரது சொந்த நாட்டைக் கையாண்ட விதமும் பாரம்பரிய, பழமைவாத முறையிலிருந்து மிகவும் விலகிச் சென்றுள்ளது.”
வணிகம் அல்லாத பிரச்சினைகளுக்காக வரி விதிப்பது உலக ராஜதந்திரத்தில் ஒரு அசாதாரண வளர்ச்சி என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
“இந்த விதத்தில் வரி விதிப்பதைப் பயன்படுத்துவது புதுமையானது. இதில் பெரும்பாலானவை பொதுவெளியில் பேசப்படுகின்றன, பெரும்பாலும் முதல் அறிவிப்பு பொதுவில் வெளியிடப்படுவது கூட அசாதாரணமானது.இதுதான் இன்று உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரு நிலைமை.”
உலக சவால்களுக்கு மத்தியிலும் வலுப்படும் இந்தியா-ரஷ்யா உறவு
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்துப் பேசிய ஜெய்சங்கர், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிபர் விளாடிமிர் புதினுடன் நடைபெறும் வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான உயர்மட்டப் பரிவர்த்தனைகள் இந்த கூட்டாண்மையின் தொடர்ச்சிக்கு இன்றியமையாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் வர்த்தகம் சிறிது அதிகரித்துள்ளது மற்றும் அதை மேலும் விரிவாக்க விரும்புகிறோம். மக்களின் இடம்பெயர்வு ஏற்பட்டு வருகிறது, இதை அதிகரிக்க வேண்டும். ரஷியாவில் கூடுதல் சந்தை அணுகல் அவசியம்,” என்று அவர் கூறினார். உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்த உறவு வளர்ச்சி பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கான முயற்சிகள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..