சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இன்று காலை 8 மணியளவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். இதில், 300 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்றனர்.
காளைகளும் கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனையிட்ட பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. மாடு பிடி வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து போட்டி நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கப் பட்டது.
இதில், 300 காளைகளும், 500 க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் ஆர்வத்துடன் வீரர்கள் பங்கேற்று காளைகளை மடக்கிப் பிடித்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.