'ஜல்லிக்கட்டு' தொடரும் விபரீதங்கள்!

'ஜல்லிக்கட்டு' தொடரும் விபரீதங்கள்!
Published on

மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரலையில் தொடர்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு ஏராளமான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2017ல் மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் மக்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளும் ஜல்லிக்கட்டை பெருமைக்குரிய விளையாட்டாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அறிவார்ந்து செயல்படும் கமல்ஹாசன் போன்றவர்கள் கூட தன்னுடைய கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போராட்டம், மெரீனா கடற்கரையில் நடத்தப்படவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மட்டும் 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் பங்கேற்ற இரண்டு பேர் பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த்ராஜ், ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய நிலையில் மாடு முட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்பவரும் உயிரிழந்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் வீரத்தை உலகுக்கு வெளிக்காட்டும் வீர விளையாட்டு. இதுவும் ஒரு அரசு விளையாட்டுதான். ஆகவே, உயிரிழப்பு ஏற்பட்டால் அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், இருவரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.

முற்போக்கு சக்திகளாக தங்களை பிரகடனப்படுத்துபவர்கள் கூட ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள். ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காகவே காளைகள் தயார் செய்யப்படுகின்றன. காளைகளுக்கு தீனி போட்டு வளர்த்து ஆட்களைத் தாக்க தயார்ப்படுத்தும் பணக்கார விவசாயிகளின் பொழுதுபோக்காகவே ஜல்லிக்கட்டு தற்போது மாறியிருக்கிறது.

வறட்சி நிவாரணத்துக்காக ஆவேசப்பட்டு அணி திரளாத விவசாயிகள் கூட ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் ஓரணியில் நிற்கிறார்கள். அவர்களது பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள் யாரென்பது தெரியவில்லை. தென் மாவட்டங்களில் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் முன்வைக்கப்படுகிறது.

‘ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டே அல்ல. அதுவொரு விபரீதம். முரட்டுத்தனமான ஒரு மாட்டையும் சில மனிதர்களையும் வெறியைத் தூண்டிவிட்டு மோதவிடுவது விளையாட்டின் எந்த இலக்கணத்தின் கீழும் வராது’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எதுவாக இருந்தாலும் ஒரு உயிர் பலியாக வாய்ப்புள்ள எந்தவொரு விளையாட்டும் ஆபத்தானதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com