

தற்போது பொங்கல் திருநாளையொட்டி புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அடங்க மறுக்கும் சீறிக் பாயும் காளைகளும், தங்கள் வீரத்தைக் காட்டி அவற்றை அடக்கும் இளம் காளையர்களும் எனப் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் விதமாக இந்த ஜல்லிக்கட்டு களம் அமைந்துள்ளது.
இந்த பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான 15-ந்தேதி நடைபெற்ற விறுவிறுப்பான ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையன்குளம் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சின்னப் பிள்ளையிலிருந்து மாடு பிடித்து வருகிறேன். டிகிரி முடித்து இருக்கிறேன் கவர்மெண்ட் வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். மாடு பிடித்து வருபவர்களுக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும். முதலிடம் பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல இரண்டாவது மூன்றாவது இடம் பிடித்தவர்கள் என அனைவருமே கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறோம்'' என்று வேண்டுகோள் விடுத்தது வைரலாகி பல இணையதளங்களில் பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றது. (நமது கல்கி செய்திகளிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது) .
இந்நிலையில், இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வைக் காண வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவித்து வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஏறு தழுவுதல் பயிற்சி மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்
ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டாக மட்டுமின்றி தமிழரின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசு வேலை பெறுவது வீரர்களுக்கு மிகப்பெரிய கௌரவமாகும். அதேவேளையில், அரசு வேலைக்காகப் பல ஆண்டுகளாகத் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களின் நலனையும் கவனத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டு வீரர்கள் அந்தந்தப் பணிகளுக்குத் தேவையான கல்வித் தகுதியையும் தங்களை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.