

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய தேவை இல்லை என்று சீமான் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் வெளியாக இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் தரவில்லை. கடந்த மாதமே சென்சாருக்கு படத்தைப் போட்டு காட்டி இருந்தாலும் இன்னும் சர்டிபிகேட் தராமல் இழுத்தடிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். படத்திற்கு உடனடியாக சென்சார் சர்டிபிகேட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஜனநாயகன் படம் தொடர்பாக விஜய்க்கு சீமான் ஆதரவாகப் பேசியுள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோவை வந்தடைந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரது வீடுகளிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது தொடர்பான கேள்விக்கு, "நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள். பட்டினியால் கிடக்கிறவங்க வீட்டில் முதலில் விளக்கேத்துங்க. அப்புறம் வீட்டுக்கு வீடு விளக்கேற்றலாம். எந்த வீட்டில் விளக்கேற்றவில்லை. எல்லோரும் இருட்டிலா இருக்கிறார்கள்" என்று பதிலுரைத்தார்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்போது வரை தணிக்கைச் சான்றிதழ் தரப்படாதது குறித்த கேள்விக்கு, ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன். நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சாரில் நெருக்கடி தரும் அளவிற்கு படத்தில் ஒன்றுமில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். தணிக்கைச் சான்றிதழ் இவ்வளவு தூரம் தடை பண்ணும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. A சான்றிதழ் கொடுப்பதாக சொல்கிறார்கள். ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்து விட்டுடலாம். அதோட தெலுங்கு பதிப்பான பகவந்த் கேசரி பார்த்து விட்டதாக கூறிய சீமான் அதில் ஒன்றும் நெருக்கடி தரும் அளவுக்கு ஒன்றுமில்லை. எனவே அதை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
கடந்த சில நாட்களாகவே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவு கொடுத்து வருகிறார். ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பு விஜய்யின் பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறியவர், ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் விஜய்க்கு ஆதரவாகக் கூறியுள்ளார்.
முழுமையாக விதிமுறைகளை பின்பற்றி இருந்தும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று மாலைக்குள் முடிவுக்கு வருமா? படம் 9ஆம் தேதி வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.