மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி:பா.ஜ.க. தலைவர் சூசகம்!

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை
Published on

2024 ஆண்டில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பொம்மை கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை கூறுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, பா.ஜ.க. கூட்டணியில் சேர விரும்புவதாகவும், இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.கடந்த சில நாட்களாகவே பா.ஜ.க.வுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் விரைவில் கூட்டணி ஏற்படலாம் என்று தகவல்கள் கசிந்தன.

மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் ஒன்றுபட்டு போராடும் என தெரிவித்திருந்தார். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவரான குமாரசாமியும், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வது பற்றி தகுந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. இது தவிர பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சை ஒருவரும் வெற்றிபெற்றார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலா ஒரு இடங்களை மட்டுமே வென்றது.

இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பணி நிரப்பப்படாமல் உள்ளது. இது குறித்து பொம்மையிடம் கேட்டதற்கு. ஜூலை 18 ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. இன்னும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பெயரை அறிவிக்காமல் உள்ளது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. மேலும்,மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி ஏற்பட்டால் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி குமாரசாமிக்கு கொடுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமண்ணா, காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு இது வெறும் வதந்திதான் என்று பொம்மை கூறினார்.

பெங்களூரில் எதிர்க்கட்சி கூட்டணிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிருஹ லெட்சுமி திட்டத்தை தொடங்கிவைக்கலாம் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, சோனியா வந்தால் வரட்டும். அவர் வருகைக்காகத்தான் இந்த திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com