அணு உலைக் கழிவுகளை பசிஃபிக் கடலில் திறந்துவிடும் ஜப்பான்.

அணு உலைக்  கழிவுகளை பசிஃபிக் கடலில் திறந்துவிடும் ஜப்பான்.

ப்பானில் உள்ள புகுஷிமா அணு உலைக் கழிவுகளை பசிஃபிக் பெருங்கடலில் கலந்துவிட வாய்ப்புள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2011ல் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமா அணு உலையில் கசிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஏற்பட்ட சுனாமியால் அணு உலையின் ரியாக்டர் வரை தண்ணீர் சென்றது. இதனால் அணு உலைக்கு தண்ணீர் அனுப்பும் மோட்டார்கள் சேதமடைந்து அணு உலையின் கூலன்ட் வேலை செய்யாமல் போனது. இதுதான் அணுக்கசிவு ஏற்பட்டதற்கான காரணமாக அமைந்தது. அந்த சமயத்தில் அணு உலை மீது 14 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலை தாக்கியது குறிப்பிடத்தக்கது. 

இதனால், அங்கு இருந்த மூன்று ரியாக்டர்களில் மொத்தமாக கசிவு ஏற்பட்டு, 3 ஹைட்ரஜன் வெடிப்புகளும் நிகழ்ந்தது. இதன் காரணமாக உடனடியாக அதன் சுற்றுவட்டாரத்தில் வசித்த 1 லட்சத்து 54 ஆயிரம் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் அணு உலைக் கசிவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2000-க்கும் அதிகமான நபர்கள் பலியானார்கள். 

இந்த விபத்தால் நீர் மாசுபாடு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் அணுக்கசிவு ஏற்பட்ட தண்ணீர் பசுஃபிக் கடலில் கலந்தது. மேலும் அணுக்கழிவுகள் தண்ணீரில் கலக்கப்படுவதை தவிர்ப்பதற்கு, அணு உலை உள்ளேயே தடுப்பு அமைக்கப்பட்டது. இதையும் மீறி அணுக்கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்ததை 2016ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதுபோக இன்றளவும் அங்குள்ள அடாமிக் ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அந்த நீர் அங்கேயே உள்ள சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. 2019 நிலவரப்படி அந்த பகுதியில் 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான அணுவினால் மாசடைந்த நீர் சேமிக்கப்பட்டிருந்தது. இந்த நீரை எப்பொழுதும் அப்படியே வைத்திருக்க முடியாது. 

எனவே இந்த நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் வெளியிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. ஜப்பானிய விதிமுறைகள் படி சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்புகளும் இல்லாத வகையில் அணிக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்குள்ள 80 சதவீத நீர் சுத்திகரிக்கப் பட்டுள்ளது. அந்த நீரில் ட்ரிடியம் தவிர எல்லாவிதமான அணு மாசுகளும் நீக்கப்பட்டுள்ளது. 

இப்படி சுத்திகரிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பெரிய டேங்குகளில் நிரப்பப்பட்டுள்ள நீரை, இந்த மாதத்திலிருந்து பசிஃபிக் கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்த 30 ஆண்டுகளில் இந்த நீரை படிப்படியாக பசிப்பிக் கடலில் கலப்பதற்கான முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது. இப்படி வெளியேற்றுவது பாதுகாப்பானது என அவர்கள் கூறுகின்றனர். இது எல்லா அணுமின் நிலையங்களிலும் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை என்கிறார்கள். 

ஆனால் இந்த நீர் விபத்து காரணமாக வெளியேறும் நீர் என்பதால், கொஞ்சம் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. எனவே உலக நாடுகள் இதை கடுமையாக எதிர்க்கிறது. இதனால் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீன்கள் பலியாகும் எனக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com