ஜப்பானின் மக்கள்தொகை சரிவு: அந்நிய நாட்டவர் அதிகரிப்பு!

ஜப்பானின் மக்கள்தொகை சரிவு: அந்நிய நாட்டவர் அதிகரிப்பு!

ப்பானின் மக்கள் தொகை இதுவரை இல்லாதபடி சரிந்திருக்கிறது; இதே சமயம், அந்நாட்டில் வசிக்கும் அயல் நாட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜப்பான் அரசு இன்று புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, அங்கு வசிக்கும் வெளி நாட்டவரின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவலாக முதியோரின் எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கிறது. இளம் வயதினரின் தொகையோ கணிசமாகக் குறைவாக இருக்கும் நிலையில், அயல் நாட்டவரின் எண்ணிக்கையால் மக்கள் தொகையின் அளவு சமன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று கூறலாம்.

ஜப்பானில் உள்ள ஜப்பானியரின் எண்ணிக்கையானது 14ஆவது ஆண்டாக 8 இலட்சம் பேர் எனும் அளவில் குறைந்துள்ளது; உள்நாட்டில் ஜப்பானியர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் தேதி நிலவரப்படி 12.24 கோடி பேர் என்று அந்நாட்டின் உள்துறை தகவல்தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக, ஜப்பானின் அனைத்து 47 பிரிபெக்சர் எனப்படும் ஆட்சிப் பகுதிகளிலும் ஜப்பானியரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
இதேசமயம், ஜப்பானில் வசிக்கும் அயல் நாட்டினரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 10.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அங்கு வசிக்கும் வெளிநாட்டவரின் மொத்த எண்ணிக்கை 29.9 இலட்சமாகப் பதிவாகியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் அயல்நாட்டவர் பற்றி கணக்கெடுப்பைத் தொடங்கிய பிறகு, ஆண்டுதோறும் இந்தத் தொகை அதிகரித்தபடியே இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு முன்னர் 2020 ஜனவரி முதல் தேதியன்று, 28.7 இலட்சம் அயல்நாட்டவர்தான் ஜப்பானில் இருந்துள்ளனர் என்கிறது, அரசுப் புள்ளிவிவரம்.  

ஜப்பான் நாட்டின் ஒட்டுமொத்த மக்கட்தொகையும் 5.11 இலட்சம் குறைந்து, 12.54 கோடியாகப் பதிவாகியுள்ளது.
இந்த நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மக்கட்தொகை குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைப் பிறப்பு மிகவும் குறைந்ததே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், ஜப்பானில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டினரை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, நிலையான பணியாளர் இருப்பைப் பேணுவதற்கு, பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க கூடுதலான அளவில் பெண்கள், முதியோர், மற்ற பிரிவினரை வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசின் தலைமை அமைச்சரவைச் செயலர் கிரோகசு மட்சுனோ தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com