பற்களை செயற்கையாக முளைக்க வைக்கும் முயற்சி.. சாதனை படைத்த ஜப்பான்!

பற்கள்
பற்கள்

விழுந்த பற்களை செயற்கை முறையில் புதிதாக முளைக்க வைக்கும் முயற்சியில் ஜப்பான் நிறுவனம் வெற்றி கண்டிருக்கிறது.

பல்லாண்டு வாழ வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் பல்லோடு வாழ வேண்டும் என்ற எண்ணமும் கண்டிப்பாக இருக்கும். ஏனெனில், அழகின் அடையாளமாக, நம் சிரிப்புக்கு அணிகலனாக பற்கள் விளங்குகின்றன. பொதுவாக, குழந்தைகளுக்கு பற்கள் விழுந்தால் அது முளைத்துவிடும். ஆனால், பெரியவர்களுக்கு அப்படி வளர்வது இல்லை. எனவே, செயற்கை பற்களை பொருத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், பற்கள் தொடர்பான ஜப்பான் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு, பல் போனால் சொல் போச்சு என்ற அச்சத்தை போக்கியிருக்கிறது.

ஆம், பற்கள் விழுந்த இடத்தில் மீண்டும் புதிய பற்கள் வளர வழிசெய்யும் வகையில் மருந்து கண்டுபிடித்துள்ளது ஜப்பான் நாட்டை சேர்ந்த டோரோஜெம் பயோபார்மா (Toregem Biopharma) நிறுவனம். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான பல் மொட்டுகள் உள்ளன. இந்த பல் மொட்டுகளே பற்களாக பரிணமிக்கின்றன. அதேசமயம் நம் உடலில் உருவாகும் புரதத்தால் பல் மொட்டுகள் பற்களாக மாற்றம் அடைவது தடுக்கப்படுகிறது. எனவே, புரதம் உருவாவதை தடுத்து புதிய பற்கள் வளரும் வகையில் ஜப்பான் ஆய்வாளர்கள் ஆன்டிபாடி மருந்தை உருவாக்கியுள்ளனர். 2005ஆம் ஆண்டு இந்த சோதனையை தொடங்கிய ஆய்வாளர்கள், 2018 ஆம் ஆண்டு ஆன்டிபாடி மருந்து மூலம் எலிகளுக்கு பற்களை வளர வைத்து வெற்றி கண்டார்கள்.

Katsu Takahashi, head of the dentistry and oral surgery department at the Medical Research Institute Kitano Hospital
Katsu Takahashi, head of the dentistry and oral surgery department at the Medical Research Institute Kitano Hospital

பிறகு மரநாய்களுக்கு (ferret) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மனிதர்களிடம் புதிய பற்களை வளரவைக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது. முதலில் பெரியவர்களுக்கும், பின் குழந்தைகளுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு 2030 ஆம் ஆண்டு இந்த மருந்து சந்தையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுறா, பல்லி போன்ற விலங்குகளுக்கு எந்த வயதில் பற்கள் விழுந்தாலும் மீண்டும் முளைத்துவிடும். ஆனால், மனிதர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லாத நிலையில், ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல் விழுதல் தொடர்பான அச்சத்தை போக்கியிருக்கிறது. மேலும், புதிய பற்களை வளர வைக்கும் உலகின் முதல் மருந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com