சிரிக்க மறந்த ஜப்பானியர்கள்: புன்னகைக்கப் பயிற்சி வகுப்புக்கு செல்லும் நிலை!

சிரிக்க  மறந்த ஜப்பானியர்கள்: புன்னகைக்கப் பயிற்சி வகுப்புக்கு செல்லும் நிலை!

உலகில் உள்ள உயிரினங்களிடமிருந்து மனிதன் வேறுபடுவது அவனுடைய சிரிப்பின் மூலமாகத்தான். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு பிறகு ஜப்பான் நாட்டு மக்களுக்கு எப்படிச் சிரிப்பது என்பதே மறந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் மிகவும் தூய்மையை கடைப்பிடிக்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் சாதாரண நாட்களின்போதே முககவசம் அணிவது அந்நாட்டு மக்களின் இயல்பான பழக்கமாகும். இந்நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக முககவசம் அணிவது என்பது அவர்களின் தினசரி பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முககவசம் அணிந்துகொண்டு பேசுவது, சிரிப்பது என முகத்தின் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் முககவசத்திற்குள் மறைந்துகொண்டனர் ஜப்பானியர்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பூசி மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையால் தற்போது உலக நாடுகள் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஜப்பான் நாட்டு அரசும் முககவசம் அணிவது இனி கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முகமூடிகளுக்கு பின்னால் தங்கள் முகங்களை மறைத்துக்கொண்ட ஜப்பானியர்கள் தற்போது முகமூடி இல்லாத வாழ்க்கையை மீட்டெடுக்கவும், முககவசத்திற்கு பின்னால் இருந்த புன்னகையைத் தைரியமாக வெளிக்காட்டுவதிலும் தற்போது பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முககவசம் இல்லாமல் இருப்பது குறித்து, ஜப்பானியத் தினசரி நாளிதழான அசாஹி ஷிம்பன் நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் முககவசத்துடன் இருந்துவிட்டதால் தற்போது முககவசம் இல்லாமல் இருப்பது சங்கடமாக இருப்பதாகவும்,இயல்பாகச் சிரிப்பது எப்படி என்பதை மறந்துவிட்டதாக பெரும்பாலான ஜப்பானியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனால் பல ஜப்பானியர்கள் முககவசம் இல்லாமல் எப்படிச் சிரிப்பது என்பது குறித்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் டோக்கியோவில் உள்ள முதியோர் இல்லத்தில் எப்படிச் சிரிப்பது என நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 30க்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்துகொண்டனர். இதுபோன்ற புன்னகை பயிற்சி வகுப்புகளை கனகாவா மாகாணத்தைச் சேர்ந்த இகாஒய்கு என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இகாஒய்கு என்றால் ஜப்பானிய மொழியில் புன்னகை செய்யுங்கள் என்று அர்த்தம். இந்த நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் இதுவரை நேரடியாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எப்படிச் சிரிப்பது எனப் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளனர். இதற்காக 700 சிரிப்பு பயிற்சியாளர்களை இகாஒய்கு நிறுவனம் நியமித்துள்ளது. ஒரு மணிநேர சிரிப்பு பயிற்சிக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தின்போது எப்படிச் சிரிப்பு என ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளில் ஒன்றான சிரிப்பை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் தவிப்பது என்பது, கொரோனா போன்ற நோய் பரவல், உறவுகளை உதறித்தள்ள நினைக்கும் மாறிவரும் குடும்ப சூழ்நிலை மற்றும் இயந்திரமயமான வாழ்க்கை ஆகியவற்றின் எதிரொலியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com