

மனித மூளை என்பது இயற்கை உருவாக்கிய மிகவும் சிக்கலான உறுப்பு. சராசரியாக, ஒருவருடைய மூளை 1.2–1.4 கிலோ (2.6–3.1 எல்பி) கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். மூளை நமது மண்டை ஓட்டின் தடிமனான எலும்புகளாலும், 'செரிப்ரோஸ்பைனல் திரவம்' (CSF) எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஊட்டமளிக்கும் திரவத்தாலும் பாதுகாக்கப்படுகிறது. மூளை மனித உடலின் பெரும்பாலான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது, உணர்ச்சி நரம்பு மண்டலத்திலிருந்து பெறும் தகவல்களைச் செயலாக்குகிறது
இந்நிலையில் ஜப்பானின் நகோயா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட புதிய வகை ஸ்டெம் செல்கள்(stem cells) மூலம் ஒரு சிறிய வகை மனித மூளைச்சுற்றை(Human brain circuits) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அந்த ஸ்டெம் செல்கள் மனிதர்களின் குறுத்தணுக்களை பயன்படுத்தி சிறிய அளவிலான மனித மூளைச்சுற்றுகளை உருவாக்குகிறது.
இது தலாமஸ் (Thalamus) மற்றும் கார்டெக்ஸ்(Cortex) ஆகிய இரு மூளை பகுதிகளை தனித்தனியாக வளர்க்கின்றனர். பின்னர் ‘அசெம்ப்ளாய்ட்’ (Assembloid)என்ற தொழில்நுட்பம் மூலம் அவற்றை வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளைச் சுற்றுகள், நிஜ மனித மூளையைப் போலவே ஒன்றோடொன்று சிக்னல்களை பரிமாறிக்கொள்வதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். ஜப்பானிய விஞ்ஞானிகளின் இந்த அரிய கண்டுபிடிப்பு, மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்களை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்றும் நரம்பியல் சார்ந்த சிகிச்சைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டிசம் போன்ற நரம்பியல் குறைபாடுகளுக்குப் இதுவரை இல்லாத புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை கண்டறியவும் இது உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா போன்ற முன்னனி உலக நாடுகள் மூளை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு,சீன ஆராய்ச்சியாளர்கள், மனித ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செயற்கை மூளையால் இயக்கப்படும் ஒரு ரோபோவை உருவாக்கி செயற்கை நுண்ணறிவில் ஒரு புரட்சியை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.