"தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “ தன்னை முன்னிலைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல், கொஞ்சம் கூட கூட்டணி தர்மம் இல்லாமல் பேசுகிறார். மறைந்த தலைவர் ஜெயலலிதாவை விமர்சித்ததை எந்த காலத்திலும் அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது தற்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்கள் எல்லாம் அம்மாவின் ஆதரவுக்காக போயஸ் தோட்ட இல்லத்தில் காத்திருந்தார்கள். ஆனால், இதுபோன்ற வரலாறுகளை எல்லாம் தெரியாதவர் கத்துகுட்டி அண்ணாமலை. அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அவ்வப்போது சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுப்படுவது என்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுவும் மறைந்த தலைவர் ஜெயலலிதா குறித்து தனியார் நாளிதழான டைமஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டி என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுவாக இதற்கு முன்பு இருந்த பாஜக தலைவர்கள் குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகன் போன்றவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயல்பட்டனர். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திகொள்ளவேண்டும் என நினைக்கும் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் அண்ணாமலையை கண்டிக்கவேண்டும். மாநில தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவராக அண்ணாமலை உள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக சென்ற அண்ணாமலை, அங்கு நடைபெற்ற 40 சதவீத ஊழல் பற்றி பேசியிருப்பாரா? அதேபோல் தற்போது தமிழக சட்டமன்றத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றிருப்பது அதிமுகவால்தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சனம் செய்துவந்தால் கூட்டணி குறித்து நாங்கள் மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும். அதிமுகவை சீண்டுவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இதனால் பாதிப்பு எங்களுக்கு கிடையாது என்பதை பாஜகவின் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியும். டெல்லியில் உள்ளவர்களுக்கு அதிமுகவின் பலம் பற்றி உணர்ந்துள்ளனர். ஆனால், மாநில தலைவர் அண்ணாமலை அதை உணர்ந்துள்ளாரா என தெரியவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எங்களோடு இருந்தால்தான் ஜெயிக்க முடியும். ஆனால், மாநிலத்தில் அண்ணாமலையின் கூட்டணி செயல்பாடு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்பதை காட்டுகிறது” என காட்டமான விமர்சனங்களை ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.