ஜியோ சினிமா (VS) ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஜியோ சினிமா (VS) ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஜியோ சினிமாவில் இந்த ஆண்டு இலவசமாக ஐபிஎல் பார்த்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வருமானத்தை இழந்துள்ளது. 

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகவும் பிரபலமாக நடக்கும் ஐபிஎல் போட்டிகளை 2023ஆம் ஆண்டு முதல் இணையத்தில் ஒளிபரப்பும் உரிமையை ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த Viacom 18 நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் சினிமா செயலியில் இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்த்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இதுவரை தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பார்வையாளர்கள் குறைந்து, அதன் விளம்பரதாரர்கள் பலர் தங்களின் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிவிட்டனர். 

இதுவரை கிட்டத்தட்ட 125 விளம்பரதாரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பர ஒப்பந்தத்தை நீக்கிவிட்டு Viacom 18 நிறுவனத்துடன் தங்களது விளம்பர ஒப்பந்தத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐபிஎல் போட்டி களிடையே நாம் அவ்வப்போது பார்க்கும் சாம்சங், ஜியோ மார்ட், அமேசான், போன் பே, பூமா போன்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் தற்போது வையாக்காம் 18 நிறுவனத்தின் கைக்கு மாறிவிட்டது. 

கடந்த ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகளுக்கு இடையே 51 விளம்பரங்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு 31 விளம்பரங்கள் மட்டுமே வருகின்றன. இதனால் 40 சதவீதத்திற்கும் மேல் வருமான வீழ்ச்சி அடைந்துவிட்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களின் ஸ்பான்சர்ஸ் என்று பார்க்கும்போது கடந்த ஆண்டு 16 பேரிலிருந்து, இந்த ஆண்டு 12 பேர் மட்டுமே உள்ளனர். 

அதாவது ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டணியிலுள்ள எந்த நிறுவனமும் ஸ்டார்ஸ் குழுமத்திடம் எவ்விதமான விளம்பர ஒப்பந்தமும் செய்யவில்லை. தற்போது ஜியோ சினிமாவில் பார்வைகள் எக்கச்சக்கமாக வருவதால் பெரும்பாலான நிறுவனங்கள் Viacom 18 நிறுவனத்து டனேயே விளம்பர ஒப்பந்தம் செய்கிறார்கள். 

மேலும் jio சினிமாவில் பல கேமரா கோணங்களில், 4K திரையில் சுலபமான ஸ்ட்ரீமிங் என பல புதிய அம்சங்களுடன் ஐபிஎல் போட்டிகளைக் காணலாம். இவை அனைத்துமே இலவசமாகக் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் ஜியோ சினிமாவில் போட்டிகளைக் காண்பதை விரும்புவதாகத் தெரிகிறது. 

இதுவரை Disney+Hotstarல் ஒளிபரப்பப்பட்ட ஒரு ஐபிஎல் சீசனின் ஒட்டுமொத்த பார்வைகளையும், Jio Cinema, இந்த ஆண்டு நடந்த ஒரு சில போட்டிகளிலேயே அதை மிஞ்சிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடர்ந்து சென்றால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்திற்கு பாதிப்புகள் இன்னும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com