
ஆகாஷ் அம்பானி, பல்வேறு இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட AI-அடிப்படையிலான அணியக்கூடிய இயங்குதளமான 'ஜியோஃப்ரேம்ஸ்' பற்றியும் அறிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஆகாஷ் அம்பானி, இன்று, நாம் இன்னொரு பெரிய சாதனையை அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
அதுதான் ஜியோபிசி. இந்த ஜியோபிசி ஒரு புரட்சிகரமான சாதனம். இது உங்கள் டி.வி-யையோ அல்லது வேறு எந்தத் திரையையோ, ஒரு முழுமையான, ஏ.ஐ-க்குத் தயாரான கணினியாக மாற்றிவிடும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் ஜியோ செட்-டாப் பாக்ஸில் ஒரு கீபோர்டை இணைப்பது மட்டுமே. உடனே, ஜியோவின் கிளவுட் சேவையில் இருந்து இயக்கப்படும் ஒரு மெய்நிகர் கணினியை (virtual computer) நீங்கள் பெறுவீர்கள்.
இதற்கு நீங்கள் முதலிலேயே பெரிய தொகையைச் செலவழிக்கத் தேவையில்லை. எவ்வளவு பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். ஜியோபிசி கிளவுடில் இருப்பதால், அது எப்போதும் புதுப்பித்த நிலையில், பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், உங்கள் தேவை அதிகரிக்கும்போது, அதன் மெமரி, ஸ்டோரேஜ் மற்றும் கம்ப்யூட்டிங் பவரை ரிமோட் மூலமாகவே நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.”
ஜியோஃப்ரேம்ஸ்: இனி கம்ப்யூட்டர் கண்ணில்!
ஜியோபிசி பற்றிப் பேசிய ஆகாஷ் அம்பானி, அடுத்ததாக ஒரு ஆச்சரியமான பொருளை அறிமுகப்படுத்தினார். அதுதான் ஜியோஃப்ரேம்ஸ். இது என்னவென்றால், ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட ஒரு கண்ணாடி. இதை நாம் முகத்தில் அணிந்து கொள்ளலாம்.
இது ஒரு சாதாரண கண்ணாடி கிடையாது. இது ஒரு ஏ.ஐ. இயங்கும் கம்ப்யூட்டர்.
இந்தக் கண்ணாடிக்குள்ளேயே ஒரு மைக்ரோபோன் இருக்கிறது. அதனால் நாம் பேசினால் போதும். ஜியோவின் பன்மொழி ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டென்ட் நமக்குச் சொல்லும். இது பல இந்திய மொழிகளையும் ஆதரிக்கும்.
இந்தியாவின் வாழ்க்கை முறை, வேலை மற்றும் விளையாடும் முறைக்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கைகளால் எதையும் செய்யத் தேவையில்லை. நீங்கள் பேசுவது மட்டுமே போதும்.
ஆகாஷ் அம்பானி, "ஜியோஃப்ரேம்ஸால், நீங்கள் உங்கள் உலகத்தை இதற்கு முன் இல்லாத வகையில் படம் பிடிக்க முடியும். நீங்கள் எச்டி புகைப்படங்கள் எடுக்கலாம், வீடியோக்களைப் பதிவு செய்யலாம் அல்லது லைவ் கூட செல்லலாம். ஒவ்வொரு நினைவும் உடனடியாக ஜியோவின் ஏ.ஐ. கிளவுட் சேவையில் சேமிக்கப்படும்" என்று கூறினார்.
ஜியோவின் அடுத்த இலக்கு: உலகமே களம்!
ஜியோவின் புதுமையான பயணத்தைப் பற்றிப் பேசிய ஆகாஷ் அம்பானி, "ஜியோவின் பயணம் இந்தியாவுக்கு அப்பால் செல்ல இருக்கிறது" என்று கூறினார். அவரது முக்கியக் கருத்துக்கள்:
உலகளாவிய விரிவாக்கம்: ஜியோவின் தொழில்நுட்பங்கள் இனி உலகளாவிய சவால்களைத் தீர்க்க வெளிநாடுகளுக்கும் செல்லும்.
பங்குதாரர்களுக்கு மதிப்பு: மற்ற நாடுகளுடன் கூட்டணி அமைத்து, ஜியோவின் சேவைகளை உலகெங்கும் கொண்டு செல்வதன் மூலம் பங்குதாரர்களுக்கும் நல்ல மதிப்பை உருவாக்குவோம்.
வாடிக்கையாளர் சேவை: ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வது, இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கு இணைப்பு கொடுப்பது, மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் மேம்படுத்துவது என்ற இலட்சியம் உள்ளது.
தொழில்நுட்பத்தின் நோக்கம்: "ஜியோ தொடர்ந்து தொழில்நுட்பத்தால் அனைவரையும் மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது" என்று ஆகாஷ் அம்பானி தனது உரையை முடித்தார்.