சம்பவங்களுக்குப் பெயர் பெற்ற கொடநாடு வழக்கில் நீதிபதி அதிரடி மாற்றம்!

சம்பவங்களுக்குப் பெயர் பெற்ற கொடநாடு வழக்கில் நீதிபதி அதிரடி மாற்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் அவருக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவை குறிவைத்து கொள்ளைகளும் பல கொலைகளும் நடைபெற்றது நாடே அறிந்தது. இந்த பங்களாவுக்குக் காவலாக இருந்த ஓம் பகதூர் என்பவர் முதலில் கொலை செய்யப்பட்டார். அதோடு, பங்களாவில் இருந்த பொருட்களும் ஆவணங்களும் திருடு போனதாகச் சொல்லப்பட்டது. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு கேரளாவைச் சேர்ந்த சயான் என்பவன்தான் காரணகர்த்தா என அப்போது சொல்லப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை நிகழ்வுகள் நடைபெற்ற ஒரு வாரத்தில் இந்த சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் கனகராஜ் என்பவரும் மர்மமான முறையில் மரணமடைகிறார். அது விபத்து என்று அப்போது சொல்லப்பட்டது. அன்றைய தினமே இந்த கொலை, கொள்ளையில் தொடர்புடைய சயான் சென்ற காரும் விபத்துக்கு உள்ளானது. அந்த இடத்திலேயே சயானின் மனைவியும் குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். காயத்துடன் தப்புகிறார் சயான். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்பதும், இவர்தான் காவலாளி ஓம் பகதூர் கொலைக்கும் பங்களா கொள்ளைக்கும் காரணமாக இருந்த சயானையும் கூலிப்படையையும் கேரளாவில் இருந்து அழைத்து வந்தவர் என்றும் அப்போது சொல்லப்பட்டது. குற்ற வழக்குகளில் இதுபோன்று தொடர் கொலைகள் நடப்பது சகஜம்தான். ஒருவரை வைத்து ஒரு சம்பவம் செய்ய வைப்பார்கள். அதே ஆட்களை உடனே காலி செய்து விடுவார்கள். இதுதான் கொடநாடு சம்பவத்திலும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சில நாட்களில் கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் குமார் மர்மமான முறையில் இறக்கிறார். அது தற்கொலை என்று சொல்லப்பட்டது. இது குறித்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியாளர்கள், ‘கொடநாடு பங்களாவில் சில சின்ன சின்ன பொருட்கள்தான் காணாமல் போயின. அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டன’ என்று சொல்லப்பட்டது.

2019ம் ஆண்டு தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூ ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் சயான், வாளையார் மனோஜ் பேட்டி கொடுத்திருந்தார்கள். அதில், ‘அப்போதைய முதலமைச்சர் பழனிசாமிக்கு இவையெல்லாம் தெரியும் என்றும், அதனால் பயப்படத் தேவையில்லை’ என்றும் கனகராஜ் எங்களிடம் சொன்னதாக சயான் அந்தப் பேட்டியில் சொல்லியிருந்தார். பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்பட்டதால் சயானும் மனோஜும் சிறை வைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகளையும் சாட்சிகளையும் மறுபடியும் விசாரிக்கத் தொடங்கியதும் சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார் பழனிச்சாமி. ஆனாலும் கொடநாடு வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தக் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த ஒரு ஆண்டு காலமாக நீதிபதி முருகன் விசாரித்து வந்தார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டத் தொடர்ந்து, பல்வேறு திருப்பங்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் இந்த வழக்கில் நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com