தமிழகத்திலுள்ள பாம்பனிலிருந்து, இலங்கையின் வடமேற்கிலுள்ள மன்னார் தீவு வரை ராமர் பாலம் நீண்டிருப்பதாக ஹிந்துக்கள் நம்புகின்றனர்.
இந்த ராமர் பாலம், 'பாரம்பரிய தேசிய சின்னமாக':அறிவிக்க வேண்டுமென, பா.ஜ.க.வைச் சேர்ந்த திரு.சுப்ரமண்யசாமி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
புராணகாலத்தில் , ராமாயணத்தில் இலங்கையில் இராவணனால், சிறைப்பிடிக்கப் பட்ட, சீதாதேவியை மீட்பதற்கு, ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக, வானரப்படைகள் இந்த சேது பாலத்தை உருவாக்கினார்கள் என்பது, வழிவழியாக நம்பப்பட்டு வருகிறது.
இது குறித்த ஆராய்ச்சித் தகவல்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தன. இலங்கைக்கு பாலம் கட்டிய இடத்தில் நீளமாக உள்ள பாறைகளின் காலம் ராமாயாண காலத்தை ஒத்து இருக்கிறது என சில ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் முன்பு காங்கிரஸின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சேது சமுத்திரம் வழியாகக் கப்பல்கள் சென்றுவர ஏதுவாக, கடலை ஆழப்படுத்தி, வழியை உருவாக்க, 'சேது சமுத்திரத் திட்டம்', என்ற திட்டத்தைத் துவக்கினார்கள். நாடெங்கிலுமுள்ள இந்துக்களிடமிருந்து, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியயதால், அத்திடடம் தற்காலிகமாகக் கை விடப்பட்டது. மீண்டும் அரசால் பிரச்னைகள் உருவாகக்கூடாது என்று, திரு.சுப்ரமண்யசாமி அப்போதே வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில், 2007ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, சேதுசமுத்திரத் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இராமர் பாலத்தை பாரம்பரிய தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி, திரு.சுப்ரமண்யசாமி, மீண்டும் ஒரு பொதுநல வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீண்டநாட்களாக நடைப் பெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் சிலநாட்களுக்கு முன், நீதிபதி.டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திரு.சுப்ரமண்யசாமி , 'மத்திய அரசு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதாகத் தெரிவித்திருந்தத. ஆனால் இன்றுவரை பதில் மனு தாக்கவில்லை' என்று குறிப்பிட்டார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் அவகாசம் வேண்டும் என அமர்வைக் கேட்டுக் கொண்டார். மேலும் மத்திய அரசு அளித்த பதில் மனுவில், 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது பரிசீலனையிலிருக்கிறது' எனத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கை இத்துடன் முடித்து வைப்பதாகக் கூறினர். மேலும் 'சுப்ரமண்யசாமி அவர்களுக்கு அரசின் முடிவு திருப்தி அளிக்கவில்லையெனில் மீண்டும் வழக்குத் தொடரலாம்' என்று அறிவுறுத்தினர்.