

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எட்டு மாடிகள் கொண்ட இந்த அலுவலக கட்டிடத்தில், திடீரென தீ பரவியதால் கட்டிடத்தின் உள்ளிருந்த பணியாளர்கள் பலரும் திணறினர்.
காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டதால், கட்டிடத்தின் உள்ளே பணியாளர்கள் மிக குறைவாகவே இருந்தனர். மேலும் கட்டிடத்தின் உள்ளிருந்த பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதோடு இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் இல்லை என்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் சென்னையில் உள்ள அண்ணா சாலையில் இயங்கி வருகிறது. எட்டு மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இன்று சனிக்கிழமை என்பதாலும், காலை வேலை என்பதாலும் கட்டிடத்தின் உள்ளே பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்த கட்டிடத்தில் இன்று (டிசம்பர் 20) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்தவுடன் 10 வாகனங்களில் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், பரவி வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை நேரம் என்பதால் பணியாளர்கள் குறைவாகவே இருந்தனர். மேலும் கட்டிடத்தின் உள்ளிருந்த பணியாளர்கள் அனைவரையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்சேதமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எண்ணற்ற மின்சாதனப் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளது. தீ முழுவதுமாக அணைந்த பிறகு இந்த தீ விபத்தில் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்பது குறித்து விவரங்கள் வெளியாகும்.
மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. கட்டிடங்களில் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படும் போது, பொதுமக்கள் யாரும் லிஃப்ட்டை பயன்படுத்தக் கூடாது என்றும், படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.